பழையன் மாறனின் அழைப்பைக் கேட்ட அரச வைத்தியர்கள், பாண்டியப் பேரரசரின் உடல் கிடத்தியிருந்த இடத்திற்கு நெய்த் தீவெட்டி களோடு ஓடிவந்தனர். அரசியாரின் மடியில் கிடத்தப்பட்ட பாண்டியப் பேரரசரின் உடலை, திறந்த பல்லக்கில் தூக்கிவைத்து நெருப்பில்லாத பாதுகாப்பான பாண்டியனின் மாளிகைப் பகுதிக்கு விரைந்து கொண்டுசென்றனர். கடுங்காவல் சூழ்ந்த நிலையில், பழையன் மாறன் தன் தோளில் சுமந்துகொண்டிருந்த இளவலையும் காவல் மடவைப் பெண்களின் துணையோடு பேரரசியாரையும், மன்னர் இருக்கும் இடத்திற்குக் கொண்டுசேர்த்தான்.
அவனது நெற்றியிலிருந்து கண் புருவம்வரை வெட்டுப்பட்ட காயத்திற்கு, அரச வைத்தியர்கள் உயர்வான மருத்துவப் பொருட்களைக்கொண்டு தீவிர சிகிச்சை அளிக்கத் தொடங்கினர். அதேசமயம் மன்னரைச் சூழ்ந்திருந்த தலைமை வைத்தியர் குழு, அவரது உடலை ஆய்வுசெய்தனர். "வீரச்செருக்கு கொண்ட பேரரசரின் இடது தோளும் கழுத்தும் சேர்ந்த இடத்தில், முறையாகப் பயிற்சி பெற்ற வர்மக்கலையைப் பயன்படுத்தி, விஷம் தோய்ந்த கத்தியால் குத்தியிருக்கின் றான் பகைவன். இக்கத்தியை உருவி எவ்வகை விஷம் பேரரசரின் உடலில் பரவியிருக்கிறது என்பதை விரைந்து பரிசோதிக்கவேண்டும்'' எனக் கூறிக்கொண்டே தலைமை வைத்தியர் அக்கத்தியை உருவினார்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/pura.jpg)
உருவிய இடத்தில் உறைந்த நிலையில் இருந்த ரத்தத் துளியை பாதரச சுண்ணத்துடன் சேர்த்து உரைகல்லில் அரைத்துப் பார்த்தார். அது கண்ணாடித் துகள்களைப் போன்று மாறியது. அதைக்கண்டு "இது விரியன் நாக விஷத்தால் தோய்க்கப்பட்ட கத்தி. இது குத்தப்பட்ட ஐந்து நாழிகை நேரம் கழிந்தவுடன் உடலை வீங்கச் செய்து வெடிக்கச்செய்யும் இயல்புடையது. மன்னரின் உடலில் தீக்காயங்கள் எதுவும் இருந்தால், அதில் வீரியமாகச் செயல்படும் தன்மையுடையது'' எனக் கூறிக்கொண்டே, மன்னரின் உடல் முழுவதையும் ஆய்வுசெய்தார். நெடுமிடல் தன் மன்னன்மீது சிறு தீக்காயங்கள்கூட ஏற்படாதவாறு தன் உடலை அவர்மீது போர்த்திக் காத்திருக்கின்றான் என்பது அப்போதுதான் தெரிந்தது.
அதே வேளையில் பழையன் மாறனின் தோளில் இருந்த இளவலை ஒரு மருத்துவர் தூக்கியபோது, அவன் மயக்கமுற்ற நிலையிலேயே தோளில் கிடந்திருக்கின்றான் எனத் தெரியவந்தது.
அவனை மருத்துவர் ஒரு பஞ்சணையில் கிடத்தி, அவனது நாடித்துடிப்பை ஆராய்ந் தார். உடனே சக மருத்துவர்களிடம், "விரைவாக மயக்க மாற்று மருந்தைக் கொண்டு வாருங்கள். இவரது மூளை செயல் இழக்கத் தொடங்குகிறது'' எனக் கூவினார். அவர் ஓடிச் சென்று சிவனார் அமிர்தம் எனப்படும் ஒரு சிறந்த மயக்கமாற்று மருந்துக் குடுவையை எடுத்துவந்தார். இது சித்தர்களால் கண்டறியப்பட்ட ஆதி மருந்து, மயக்கத்தால் உயிர் பிரியும் தருவாயில் ஒருவர் இருந்தா லும், அவரது மூக்கில் இம்மருந்துப் பொடியை இருவிரல்களால் எடுத்துத் தடவிவிட்டால், சில நொடிகளில் அவர்களது மூளையைச் செயல்புரியச் செய்யும் அரிய மருந்து. சங்ககால பாண்டியர் அரண்மனையில் இதுபோன்ற அரிய மருந்துகள் எப்பொழுதுமே இருக்கும்.
இந்த நேரத்தில் அவ்விடத்திற்குப் பாண்டியப் பேரரசின் ஒற்றர் படைத் தலைவர் விரைந்து வந்தடைந்தார். பழையன் மாறனிடம் "நான் கணித்தது சரியாக நிகழ்ந்து விட்டது. இதனால்தான் இந்த முன்னீர்ப் பெருவிழாவிற்கு அரச குடும்பத்தார் யாரும் வரவேண்டாம் என்று இறைஞ்சிக் கேட்டிருந்தேன். இப்போது இளவலைக் காப்பாற்றியாகவேண்டும். அதற்காகத்தான் நாங்கள் இங்கு வந்துள்ளோம்'' என அத் தலைவர் கூறிக்கொண்டிருக்கும்போது, இளவல் வைத்தியர்களின் முயற்சியால் கண் திறக்கத் தொடங்கினான். அவனுக்கு அங்கு நடக்கும் சூழல் தெரியாமலிருக்க வேண்டுமென மெய்காப்பாளர் கள் விரும்பினர். ஆதலால், அரசியார் அனுமதி யோடு ஒற்றர்படைத் தலைவர் அவசர உத்திகளைக் கையாண்டார். மேலும், பழையன் மாறனிடம் அவர் "நான் தூது புறாக் களை இரண்டு இடங்களுக்கு அனுப்பி யிருக்கின்றேன். அவை இரண்டும் இந்நேரம் ஆதனார் கோட்டத்திற்கும், மதுரை மாநகரக் கோட்டையில் அகப்படைத் தலைவர் இருக்கும் இடத்திற்கும் அச்செய்தியை கொண்டு போய்ச் சேர்த்திருக்கும்'' எனக் கூறினார்.
இங்கு தூது புறாக் களைப் பற்றி நாம் தெரிந்துகொள்ள வேண்டும். தூது அனுப்பு வதற்காகப் பயன்படக் கூடிய புறாக்கள் என்பது மிக விரைவாகப் பறந்து செல்லக்கூடிய ஒருவகைப் புறாக்கள் ஆகும். இவ்வகைப் புறாக் கள், மன்னர் வாழும் அரண்மனைகளிலும், குருகுலப் பள்ளிகளிலும், தலைமை அமைச்சர் மற்றும் சேனாதிபதி போன்றோர் இருக்கும் மனைகளிலும், அரச மருத்துவர்கள் இருக்கும் மனைகளிலும் வளர்க்கப்படும். இவற்றைப் பழக்குவதற்கு, இவற்றின் கண்களைக் கட்டி நீண்ட தூரத்திற்கு எடுத்துச்சென்று கண் களைத் திறந்துவிட்டுப் பறக்கவிடுவார்கள். இவை, பறந்து மேலே சென்று வானத்தில் மூன்றுமுறை வட்டமடிக்கும். பின் அவற்றின் புவிசார் அறிவுத்திறனைப் பயன்படுத்தி, தான் வாழ்ந்த இடத்தின் திசையறிந்து விரைவாகப் பறந்துசென்று அதன் இருப்பிடம் சென்றடையும் திறன் படைத்தவை.
தூது புறாக்கள், ஒரு நாழிகைக்கு 80 காததூரம் பறக்கும் இயல்புடையது. இரண்டரை நாழிகை சேர்ந்தது ஒருமணி நேரம். இரண்டரை காததூரம் ஒரு கிலோமீட்டர் எனில், ஒரு மணி நேரத்தில் 80 கிலோமீட்டர் சென்றடையும் இயல்புடையது. இவற்றை ஒற்றர் படையினர், இவை வளர்க்கப்படும் இடங்களிலிருந்து கூண்டுகளில் அடைத்து, போர் நடக்கும் இடங்கள், அரசர்கள் செல்லும் இடங்கள் மற்றும் உளவு பார்க்கும் இடங் களுக்கு, கூத்தர்கள், சாத்து வியாபாரிகள் போன்றோர் செல்லும் கூட்டத்துடன் சேர்ந்து, எடுத்துச் செல்வார்கள். அங்கிருந்து அவசரச் செய்திகளை அனுப்ப அப்புறாக்களின் கழுத்தில் தாலிப் பனை ஓலைகளில் செய்தி எழுதி, சுற்றிக் கட்டிவிட்டு அனுப்பிவிடுவார்கள். இது காலதாமதமின்றி உடனுக்குடனே தங்களது இடங்களுக்குச் சென்று சேர்ந்துவிடும்.
இவ்வாறு ஒற்றர்படைத் தலைவரால் அனுப்பப்பட்ட புறா, குரு ஏகன் ஆதனார் இருக்கும் அறையைச் சென்றடைந்திருந்தது. அவரது அறைக்குள் அப்புறா படபடத்து வந்தமர்ந்ததை அறிந்த ஆதனார், பள்ளி கொண்டிருந்த தன் இருக்கையிலிருந்து விரைவாக எழுந்து, இவ்விரவு வேளையில் தூது புறா வருவதற்கான காரணம் புரியாமல், அதைத் தனது இரு கைகளால் அரவணைத்து, தீவட்டி வெளிச்சத்தில் அது கொண்டுவந்திருந்த ஓலைச்சுருளை விரித்து வாசித்தார். தன் உடலிலிருந்து உயிர் ஒருகணம் பிரிந்து, பின் வந்து சேர்ந்ததுபோல், அதிலிருந்த செய்தி அவரைக் கலக்கப்படுத்தியது. அதில் கடைசியாக பாண்டிய இளவலை நீங்கள்தான் காப்பாற்றவேண்டும் என எழுதியிருந்தது.
தன் மனப் பதற்றம் மேலும் மேலும் அதிகரிப்பதை நிதானப்படுத்திக்கொண்டு, துரிதமாக அடுத்தகட்ட நடவடிக்கையை நோக்கிச் செயல்பட ஆரம்பித்தார். விரைவாக தனது பயிற்சிக் கவச உடையைத் தரித்துக்கொண்டு, குதிரைப் பயிற்சிப்பள்ளி வளாகத்திற்கு விரைந்தார். அங்கு குதிரைப் பணிக்கர்கள் தங்கியிருந்த வளாகத்தின் தாழ்மணிகளைத் தட்டி ஓசை எழுப்பினார்.
அவசர காலத்தில் ஒலி எழுப்பும் முறையில் அம்மணிகள் ஒலித்தன.
அவ்வோசை கேட்டு பணிக்கர்கள் ஓடிவந்து தாழ்களைத் திறந்து, பெரிய கதவுகளைத் திறந்த போது, அங்கே இப்பள்ளியின் தலைமை குருவே தீவெட்டியுடன் கவச உடையில் இருப்பது கண்டு அதிர்ச்சியுற்றனர்.
அப்போது ஆதனார், "என் உயிர் நண்பனின் உயிர் பிரிந்துவிட்டது. அவனது பாண்டியப் பேரரசைக் காப்பாற்றும் மிகப்பெரிய பொறுப்பு நம் தலைமீது உள்ளது. பத்து போர்க் குதிரைகளுக்கு விழுதி உருண்டைகளை ஊட்டிவிட்டு. முகப் பட்டகங்களையும் கடிவாளங்களையும் மாட்டி, நீங்கள் போர்க்கவசங்கள் தரித்து, வில் கேடயங்களுடன் என்னோடு மருங்கூர் புறப்படுங்கள்'' என அவசரச் செய்தி அறிவித்துவிட்டு, தன் அறையை நோக்கி விரைந்தார். இங்கே விழுதி உருண்டை என் றால் என்ன என்பதைத் தெரிந்துகொள்வோம்.
ஒரு போருக்குச் செல்லத் தயாராக இருக்கும் குதிரைகளுக்கு, யானைகளுக்கு, காலாட்படை வீரர்களுக்கு, சங்க காலத்தில் விழுதி என்ற மூலிகையைக் கொடுப்பது வழக்கம். குதிரைகளுக்கு இம்மூலிகையையும், கொள்ளுப் பயரையும் சேர்த்து இடித்து உருண்டை திரட்டி, அவற்றின் வாயில் ஊட்டிவிடுவார்கள். யானைகளுக்கு விழுதி மூலிகைகளை அரிசியோடு சேர்த்து அவித்துக் கவளங்களாக உருட்டி ஊட்டி விடுவார்கள். காலாட்படை வீரர்களுக்கு இதன் இலைகளை மென்று, தங்களது நாக்குக்கடியிலும் கன்னங்களுக்கிடையிலும் வைத்துக்கொள்ளச் செய்வார்கள்.
இவ்வாறு செய்துகொண்டால், எவ்வளவு தூரம் எவ்வளவு விரைவாக ஓடினா லும் குதிரைகளுக்கும், மனிதர்களுக்கும், யானைகளுக்கும் மூச்சிரைக்காது. இது நுரையீரல்களுக்கும் நாளமில்லாச் சுரப்பிகளுக்குமான ஊக்கமருந்தாகச் செயல்படும். தற்போது மதுரை காமராஜர் பல்கலைக் கழகத்திற்கு அருகாமையிலுள்ள ஊத்துக்குடியில், சங்க காலத்தில் பாண்டிய நாட்டு யானை மற்றும் குதிரைப் படை களுக்கான தீவனங்களை விளைவிக்கும் வேளாண்குடிகள், இங்கிருந்துதான் மிக அதிக அளவில் விழுதி மூலிகைகளை விளைவித்துக் கொடுத்ததாகக் கூறுவார்கள்.
ஏகன் ஆதனார் கோட்டத்தில் இவ்விழுதி உருண்டையை குதிரைப்பயிற்சி கொடுப் பதற்காக எப்போதுமே தயார் நிலையில் வைத்திருப்பார்கள். ஏகன் ஆதனார் கட்டளைப்படி விரைந்து செயல்பட்ட குதிரைப் பணிக்கர்கள், இருவருக்கு ஒரு படைக்கருவிகளென, ஐம்படைக் கருவிகளையும், கவச உடைகளையும் தரித்துப் பயணத்திற்குத் தயாரானார்கள். நடுவே குரு ஏகன் ஆதனார், உயர்ந்த குதிரையில் கம்பீரமாக அமர்ந்துவர, முன்னும் பின்னும் குதிரைப் பணிக்கர்களின் குதிரைகள் செல்ல, தீவெட்டிகளின் சமிக்ஞைகளோடு ஏகன் ஆதனார் கோட்ட பெரிய நுழைவாயில் கதவுகள் திறக்கப்பட்டன. குதிரைகளின் வேகம் நுழைவாயிலைக் கடந்த சிலவினாடிகளில் புயலாகப் பறந்தன.
அதேவேளையில், மருங்கூர் பாண்டியன் மாளிகையில் விஷமுறிவுத் தைலம் மன்னன் உடல் முழுவதும் தடவப் பட்டு, அத்தைலத் தால் நனைத்த ஆடைகள் உள்ளாடைகளாக அணிவிக்கப்பட்டு, அவற்றின்மீது அரச அலங்கார உடைகளும், பாண்டியனின் அனைத்து அலங்கார முத்து, மாணிக்க, பொன் அணிகலன்களும் அணிவிக்கப்பட்டு, அம்மாளிகையில் இருந்த அழகிய ஆசனத் தில் அமர்த்தப்பட்டு, அதிக ஒளிதரும் பெரிய நெய்ப்பந்த தீவெட்டிகள் புடைசூழ, மாளிகை யின் முன்வாசலுக்கு எடுத்துவரப்பட்டார் பாண்டியப் பேரரசர், உயிர் பிரிந்த உடலாக.
அதைக்கண்ட அந்நகர மக்கள், தங்களது மார்பினைக் கைகளால் அடித்துக்கொண்டு கூக்குரலிட்டு, மன்னரின் மாளிகையை நோக்கி ஓலமிட்டு ஓடிவந்தனர். கூத்துக்கு வந்த கூத்தர்களின் உருமி மேளங்கள் இறுதிப்பறை அடிக்கத் தொடங்கின. ஓலமிட்ட கடல் காற்றில் உருமியின் உர் உர் என்ற சத்தத்திற்கேற்று அசைவதுபோல், தீவெட்டி தீபங்கள் அசையத் தொடங்கின. தீவெட்டிகளின் தீப அசைவைப் பார்த்த அங்கிருந்த பேய் மகளிர்கள், கூத்தர்களின் ஒருவித உருமியின் உருமல் பறை இசையைக் கேட்கக்கேட்க, தங்களுக்குள் ஏதோ ஒரு உணர்வால் எழுப்பப்பட்டு, அங்கிருந்த நெருப்பில் வெந்த உடல்கள்மீது நடந்து, தங்களின் கூந்தலை விரித்துவிட்டு, அசைந்து அசைந்து ஆடத் தொடங்கினர்.
உருமியின் ஓசையும் காற்றின் ஓலமும் மக்களின் கூக்குரலும் அவர்களை மேலும் மேலும் ஆங்காரத்துடன் ஆடத்தூண்டின. பேய் மகளிர்கள் அனைவரும் ஒன்றுசேர்ந்து மன்னரைச் சுமந்துவரும் பல்லக்கைச் சுற்றிச்சுற்றி ஆடினர்.
இங்கே பேய் மகளிர்கள் என்றால் யார் எனத் தெரிந்துகொள்ளவேண்டும். பேய் மகளிர்கள் பெரும்பாலும் கணவனை இழந்த பெண்களும், திருமணமாகாத முதிர் கன்னிகளும், ஓர் இனக்குழுவின் மூத்த பெண்களுமாக மூன்று வகையிலும் தனக்குத் துணையில்லா மகளிர்களாக இருப்பார்கள். ஆதி மனிதகுடிகளுக்கு பெண்களே தலைமைப் பொறுப்பு வகித்தவர்களாக இருந்தனர். அவர்களது குடிகளில் நடந்த பேரிழப்பின்போது தங்கள் கடந்தகால நிகழ்வுகளின் நினைவாக சோகப் பாடல்களை, தங்கள் இன மொழியில் உடல் அசைவுகளோடு பாடுவார்கள். இவர்கள் பெரும்பாலும் இறந்தவர்களின் பள்ளிப் படைகளைப் பராமரிக்கும் பணிகள் செய்வார்கள். போர்க்களங்களிலும் அவற்றிற்கு அருகிலிருக்கும் குடியிருப்புப் பகுதிகளிலிருந்தும், பேய் மகளிர்கள் உருவாவது வழக்கம். இவர்களே பின்னாளில் பேய்ச்சி, பேயம்மாள், சுடுகாட்டுக் காளி என்றெல்லாம் வணங்கப்பட்டனர். இவர்கள், மனரீதியாகப் பாதிக்கப்பட்டு கூறும் நிகழ்வுகள் நம்பப்பட்டு, சங்கப்புலவர்களும் இவற்றை ஏற்றுக்கொண்டு போர்க்கள வர்ணனைகளில் பிணங்கள் உண்ணும் பேய்கள் இரவில் போர்க்களம் வருவதாகப் பாடினார் கள். வரும் இதழில், பேய் மகளிர்களின் வழிபாட்டுச் சடங்குகளின் பரிணாம வளர்ச்சியையும், மன்னவனின் இறுதி ஊர்வலத்தையும் காண்போம்.
(இன்னும் விரியும்...)
தொடர்புக்கு: 99445 64856
தொகுப்பு: சி.என். இராமகிருஷ்ணன்
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2025-05/pura-t.jpg)